நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் 11 பேர் மீது வழக்குபதிவு கடையத்தில் பரபரப்பு
நெல்லை, நவ. 13: நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய திருநங்கைகள் 11 பேர் மீது பாளை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை, நரசிங்கநல்லூர் பகுதியில் திருநங்கைகளுக்கு அரசு தரப்பில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 60க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக கூடுதல், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு அளிக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 11 திருநங்கைகள் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.