புனலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை
செங்கோட்டை,அக்.11: புனலூர் அருகே வீட்டின் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்வனப்பகுதியில் விட்டனர். செங்கோட்டை அடுத்த புனலூர் பிரவந்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரும்தோல் சங்கப்பாறையில் சிபி என்பவரது வீட்டில் கிணற்றில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே வெளியே வர முடியாமல் சிறுத்தை தவித்தது. அதிகாலையில், சிபியின் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் உள்ள வேலி அமைக்கப்படாத கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, கிணற்றில் இருந்து சத்தம் வருவதைக் கேட்டபோது, சிறுத்தையை கண்டனர். இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
புனலூர் டிஎப்ஓ ஷாஜிகுமார், ரேஞ்ச் அதிகாரிகள் திவ்யா, மனோஜ், அம்பனாடு மற்றும் பத்தனாபுரம் பிரிவுகளின் வன அதிகாரிகள், புனலூர் தீயணைப்பு நிலைய குழுவினருடன் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தாமல் வலையைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து வெளியே இழுத்து கூண்டில் அடைத்தனர். இதைதொடர்ந்து வலையில் சிக்கிய சிறுத்தை டாக்டர் சிபி தலைமையில் அம்பனாடு நிலையத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதில் சிறுத்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட சிறுத்தையை பத்தனம்திட்டா அடர்வனப்பகுதியில் விடப்பட்டது.