தமிழ்நாடு டென்னிகாய்ட் அணியில் மானூர் மாணவர்கள் தேர்வு
மானூர்.ஆக.6: தமிழ்நாடு டென்னிகாய்ட் அணியில் மானூர் மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு வளையப்பந்து (டென்னிகாய்ட்) அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டிகள் சென்னை வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு தலா 8 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு அணியில்,சப் ஜூனியர் பிரிவில் ஆறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், நெல்லை மாவட்டம், மானூரை சேர்ந்த முருகன் மகன் சுராஜ்கோசன் ஜாய், (14) முதலிடத்தையும், அதே ஊரைச் சேர்ந்த மகாதேவன் மகன் ஜோயல் (13) இரண்டாமிடத்தையும் பிடித்து கோப்பைகளை வென்றனர். இனிவருங்காலங்களில், அகில இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக இருவரும் விளையாடுவார்கள். மானூர் திரும்பிய வலையப் பந்து வீரர்கள் இருவரையும், பயிற்சியாளர் முத்தையா மற்றும் ஊர் பொதுமக்கள் மேளதாளம் முழங்க வரவேற்றனர்.