மின்கம்பத்திலிருந்து விழுந்த பெயிண்டர் பலி
பாப்பாக்குடி, ஆக. 6:முக்கூடல் அருகே பாப்பாக்குடி இலந்தகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சேர்மகனி மகன் களஞ்சியம்(30). பெயிண்டர். இவருக்கு மனைவி, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். களஞ்சியத்திற்கு எலக்ட்ரீசியன் வேலையும் தெரியும் என்பதால் அவ்வப்போது அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் வேலைக்கும் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் வேதகோயில் தெருவிலுள்ள ஒருவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து மின் இணைப்பை சரி செய்து தருமாறு களஞ்சியத்தை அவர் தனது செல்போனில் வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற களஞ்சியம் மின்மாற்றிகளை அணைத்துவிட்டு மின்கம்பத்தில் ஏறி வயரை சரி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு பறந்து வந்த காகம் ஒன்று களஞ்சியத்தின் தலையில் கொத்தியது. அதனை விரட்டிய போது நிலை தடுமாறிய அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த களஞ்சியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.