ஆலங்குளத்தில் பரபரப்பு
ஆலங்குளம், ஆக.5: ஆலங்குளம் பரும்பு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், எஸ்ஐ சத்யவேந்தன் மற்றும் போலீசார் நேற்று மாலை தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ராஜீவ்காந்தி நகர் வாட்டர் டேங்க் அடியில் சந்தேகத்திற்கிடமாக வகையில் மூன்று பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து உடனடியாக போலீசார் அவர்களை துரத்தி சென்று வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்தனர். இருவர் தப்பியோடி விட்டனர். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் பிரியதர்ஷன் (39) என்பதும், ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் மினிலாரி டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை நடத்தியதில் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான எட்டரை கிலோ கஞ்சா அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆலங்குளம் எஸ்ஐ சத்யவேந்தன் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் தலைமையில் போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.