மரக்கன்று நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
தூத்துக்குடி, நவ. 1: தமிழ்நாடு அரசின் பசுமை தமிழகம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனத்துறை, மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மரக்கன்று நடுதல், நீர் நிலைகளை பாதுகாக்க 5 லட்சம் பனை மர விதைகள் விதைக்கும் பணி தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஆத்தூர் அருகே உள்ள குச்சிக்காடு ஜேஜே நகரில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடைபெற்றது. ஆத்தூர் சுற்றுவட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக மேலாண் துணைவேந்தர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான கென்னடி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கலந்து கொண்டு 5 லட்சம் பனை மர விதைகள் விதைக்கும் பணியை தொடக்கி வைத்து பேசியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் 33 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும் என தேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக குறைவாக 5 சதவீதம் காடுகள் மட்டுமே உள்ளது. அதிகமான மரக்கன்றுகள் நட்டால்தான் காடுகளின் அளவை அதிகரிக்க முடியும். மேலும் மாசு கட்டுப்பாட்டை தடுக்க முடியும். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12.65 லட்சம் மரக்கன்றுகளும், 10 லட்சம் பனை விதைகளும் விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அரசு மட்டுமோ அல்லது ஒரு துறையோ எடுத்துச் செய்ய முடியாது. இந்த இலக்கை அடைய மக்கள் இயக்கமாக மாறும் பொழுதுதான் இலக்கை அடைய முடியும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து இலக்கு அடைய முயற்சி செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குறைவான காடுகளே உள்ளன. ஆனால் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. எங்கெல்லாம் தகுந்த இடங்கள் உள்ளதோ அங்கு எல்லாம் மரங்கள் வளர்க்க வேண்டும், என்றார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட உதவி வன பாதுகாவலர் முனியப்பன் கருத்துரை வழங்கினார். ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)ராஜா, தூத்துக்குடி மாவட்ட பசுமை சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி நன்றி கூறினார்.