சேரன்மகாதேவி பேரூராட்சியில் கட்டணம் வசூலிப்பதில் கறார் குடிநீர் விநியோகிப்பதில் ஒரே ஊருக்குள் பாகுபாடு
வீரவநல்லூர், டிச.14: சேரன்மகாதேவி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கு ஒரே மாதிரியான குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் குடிநீர் குடிநீர் வழங்குவதில் மட்டும் ஒரே ஊருக்குள் பாகுபாடு காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வட பகுதிக்கு தினமும் குடிநீர் விநியோகிக்கும் நிலையில் தென்பகுதி மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். பலதடவை முறையிட்டு பலன் இல்லாததால் மக்கள் நிர்வாகம் மீது அதிருப்தியில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றினை தன்னகத்தை கொண்டுள்ள இப்பேரூராட்சியானது நெல்லை மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழ்கிறது.
வளர்ந்து வரும் பேரூராட்சியில் ஒன்றான சேரன்மகாதேவியில் சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலங்கள், மாவட்ட கூட்டுறவு அலுவலகம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் என பலதரப்பட்ட அலுவலங்கள் உள்ளது. எனவே சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் பகுதியாக சேரன்மகாதேவி திகழ்வதால் பணி நிமித்தமாக சேரன்மகாதேவிக்கு வந்த பலர் சேரன்மகாதேவியில் வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளனர். சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றிலிருந்து உறைகிணறுகள் மூலம் உள்ளூர் குடிநீர் திட்டம் மட்டுமின்றி வடக்கு விஜயநாராயணம் கப்பல் படைத்தளம் குடிநீர் திட்டம், பணகுடி, வள்ளியூர் கூட்டு குடிநீர் திட்டம் என 2 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தற்போது களக்காடு நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பைப் லைன் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
சேரன்மகாதேவி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் கன்னடியன் கால்வாய் கரையின் வடபுறம் 9 வார்டுகளும்,தென்புறம் 9 வார்டுகளும் உள்ளது. இதில் வடபுறம் உள்ள 9 வார்டுகளுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தென்புறம் உள்ள 9 வார்டுகளுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சிக்கு குடிநீர் கட்டணமாக ரூ.100 அனைவரும் செலுத்தி வரும் நிலையில் தென்பகுதி மக்களுக்கு மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
இதுகுறித்து தென்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இதே நிலை நீடித்து வருகிறது. சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் உள்ளூர் தென்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுவது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வடபகுதி போல் தென்பகுதி மக்களுக்கும் தினமும் குடிநீர் வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அதிருப்தி
சேரன்மகாதேவி பேரூராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தென்பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்வோம் என தேர்தல் உறுதிமொழி கொடுத்துள்ள நிலையில் பதவியேற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய உள்ளதாகக் கூறப்படுகிறது. கலங்கலான குடிநீரால் உடல்நலக்குறைவு
சேரன்மகாதேவி பேரூராட்சியில் வடபகுதி பகுதிகளுக்கு உறைகிணறுகளிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்பகுதி மக்களுக்கு அம்மைநாதர் கோயில் அருகில் திறந்தவெளியில் ஆற்றினுள் மோட்டார் போடப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தென்பகுதி மக்களுக்கு கலங்கலான குடிநீர் வருவதால் காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் வலுவாக புகார் தெரிவித்துள்ளனர். 10 நாட்கள் மட்டுமே
குடிநீர் விநியோகம்
இதுகுறித்து தென் பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவர் கூறுகையில், ‘நான் சேரன்மகாதேவி பேரூராட்சியின் தென்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன். கன்னடியன் கால்வாயின் வடபுறம் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் தென்புறம் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் மோட்டார் பழுது, பைப் லைன் உடைப்பு போன்ற காரணங்களால் ஒரு மாதத்தில் சுமார் சுமார் 10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. ஒரே ஊருக்குள் பாகுபாடு பார்த்து குடிநீர் வழங்குவது சரிசெய்யப்படும் வரை தென்பகுதி மக்களிடம் குடிநீர் கட்டணம் வசூலிக்கக்கூடாது’ என்றார்.