தூத்துக்குடியில் ஆட்டோ - பைக் விபத்தில் தியேட்டர் பங்குதாரர் பலி
தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடியில் ஆட்டோ - பைக் மோதிய விபத்தில் தியேட்டர் பங்குதாரர் பலியானார். தூத்துக்குடி பாளை ரோடு நேரு தோட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(62). இவர், பானுமதி தியேட்டரின் பங்குதாரர் ஆவார். நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அண்ணாநகர் மெயின் ரோடு, டூவிபுரம் 3வது சந்திப்பு அருகில் வந்த போது அதே வழியில் வந்த ஆட்டோ இவரது பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சங்கர் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். விபத்து குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.