பொதுமக்கள் அச்சம் வேண்டாம் தமிழாக்குறிச்சி அணையில் நீர்க்கசிவு அடைக்கும் பணி
நெல்லை, நவ. 28: பாளை. அருகே தமிழாக்குறிச்சி அணையில் நீர்க்கசிவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் உறுதி அளித்தார். நெல்லை மாவட்டம், திடியூர் அருகே தமிழாக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் பச்சையாறு தண்ணீரையும் இணைக்கும் வகையில் அணை கட்டி முடிக்கப்பட்டது. தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் வெள்ளநீர் கால்வாய் திறந்து தமிழாக்குறிச்சி அணை வழியாக தண்ணீர் செல்வதற்கும், பச்சையாறு உபரி தண்ணீர் இந்த அணையின் ஷட்டர் வழியாக வெளியேறுவதற்கும் என 2 ஷட்டர்கள் உள்ளன. 2023ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது இந்த அணையை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் தமிழாக்குறிச்சி வெள்ளநீர் தடுப்பணையில் அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் ஊருக்குள் வெள்ளம் புகும் அச்சம் உள்ளதாக பொதுமக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்த ரூபி மனோகரன் எம்எல்ஏ பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) திருமலைக்குமார் மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். அணையில் ஏற்பட்டுள்ள கசிவை அடைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து இயந்திரங்களுடன் கண்காணிப்பு பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று ரூபி மனோகரன் எம்எல்ஏ ேகட்டுக் கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை பொறியாளர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.