54 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்
தூத்துக்குடி, ஆக.27:தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 54 அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 54 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர்லால் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி காலை உணவு திட்டத்தை துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், முதலமைச்சரின் உன்னத திட்டமான காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளிலுள்ள 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது அந்த திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 54 அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 5424 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இதற்காக விசாலமான சமையல் அறை குரூஸ்புரத்தில் அனைத்து வசதிகளுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் வாகனங்களில் காலை உணவு எடுத்துச் சென்று வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.