காற்றாலை காவலாளி மர்மச்சாவு
எட்டயபுரம், ஆக. 27: எட்டயபுரம் அருகே கழுகாசலபுரத்தைச் சேர்ந்த வர்பெருமாள்சாமி (63). இவரது மனைவி சகுந்தலாவுடன் விளாத்திகுளத்தில் வசித்து வந்தார். இவர் எட்டயபுரம் அருகேயுள்ள தலைக்காட்டுபுரத்தில் இயங்கி வரும் தனியார் காற்றாலையில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் 6 மணிக்கு வேலைக்கு சென்றார். நேற்று காலையில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சென்று பார்த்தபோது பெருமாள் சாமி இறந்து கிடந்தார். அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எட்டயபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லாரி மீது கார் மோதியதில் காயமடைந்த சிறுவன் சாவு தூத்துக்குடி, ஆக.27: ஈரோடு விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் தனது மனைவி கோமதி (29), மகன்கள் ஆத்விக் (7), நிதர்சன் (6) ஆகியோருடன் கடந்த 24ம் தேதி காரில் திருச்செந்தூருக்கு சென்றார். பின்னர் அதேகாரில் அனைவரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலை ஜோதிநகர் விலக்கு அருகே வந்தபோது அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இவர்களது கார் மோதியது. இதில் காயமடைந்த 4 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிதர்சன் இரவில் உயிரிழந்தான். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.