கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தகுதி
நெல்லை, அக். 26: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற கொங்கராயக்குறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தகுதிபெற்றார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 2025- 26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த வாரம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற கொங்கராயக்குறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கதிர் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் மும்முனை தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் வென்றார். இதேபோல் நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். அத்துடன் தூத்துக்குடி மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அத்துடன் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் பெற்றார். மாநில போட்டிக்குத் தேர்வான மாணவரை பள்ளித் தாளாளர் எபநேசர் சதீஷ் பால், டீன் மேரி ஷீபா, நிர்வாக இயக்குநர் பால்ராஜ், பள்ளி முதல்வர் சித்ரா, உடற்கல்வி ஆசிரியர் காசிமணி உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.