கோவில்பட்டியில் நெல்லை டிஐஜி ஆய்வு
கோவில்பட்டி, அக்.26: கோவில்பட்டியில் முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு இம்மாதம் அக்.28ம் தேதி வருகைதரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகரதிமுக அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் உருவச்சிலையை திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் முதல்வர், மறுநாள் (அக்.29ம் தேதி) காலை தென்காசி மாவட்டத்தின் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வர் வரும் வழிகள் குறித்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக புதிதாக திறக்கப்பட உள்ள திமுக கட்சி அலுவலகம், முதல்வர் வரும் வழிகள் மற்றும் முதல்வர் தங்க உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல், தென்காசி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வழிகள் ஆகியவற்றில் டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின்போது ஏடிஎஸ்பி திபு மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் உடனிருந்தனர்.