12 ஊராட்சிகள் தூத்துக்குடியுடன் இணைப்பு கோவில்பட்டியில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவில்பட்டி, நவ. 25: தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்றும், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. பயணியர் விடுதி முன்பு நடந்த இந்நிகழ்ச்சிக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங். துணை தலைவர் அய்யலுசாமி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தேசிய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ஞானமூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.