புதிய தார் சாலை மழையால் சேதம் முறையாக அமைக்கவில்லை என புகார்
உடன்குடி,அக்.23: பரமன்குறிச்சி அருகே முறையாக அமைக்கப்படாத தார் சாலை தற்போது பெய்து வரும் மழையில் கரையோரங்கள் கரைந்து வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமன்குறிச்சியிலிருந்து கீழநாலுமூலைகிணறு, பிச்சிவிளை இணைப்பு மங்கம்மாள் சாலை சிதிலமடைந்து காணப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை புதியதாக அமைக்கப்பட்டது. வழக்கமாக சாலை அமைக்கப்படும் போது கரையோரங்களை பலப்படுத்தும் வகையில் சரள்கற்கள் கொண்டு பரத்துவது வழக்கம். ஆனால் மாறாக இந்த சாலையை அமைக்கும்போது அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாததின் காரணமாக சாலையின் ஓரத்தை பலப்படுத்த அருகிலிருந்த தேரி மணல்களை ஜேசிபி கொண்டு கரையோரம் குவித்து வைத்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் சாதாரண சிறிய மழைக்கு சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலையோரங்களிலுள்ள குவித்து வைத்திருக்கப்பட்டுள்ள மணல் அரித்து செல்கிறது. இதனால் சாலை பலவீனமடைவருவதுடன் சேதமடையும் நிலையும் உள்ளது. மேலும் கரையோரங்களில் ஜேசிபி கொண்டு தோண்டப்பட்ட பள்ளங்களை குப்பைகளைக்கொண்டு மூடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.