கோவில்பட்டி அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்
கோவில்பட்டி, நவ.22 கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வாகனங்கள் தகுதிச்சான்று இன்றி இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து, சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு அதற்கான அனுமதி சான்றிதழை பெற்று இயக்க வேண்டும் என வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், விளாத்திகுளம் வட்டம், புதூர் பகுதியில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி மற்றும் அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையின் போது, சட்டத்திற்கு புறம்பாக, தகுதிச்சான்று புதுப்பிக்காமல், பொதுச்சாலையில் இயக்கப்பட்ட 3 ஆட்டோ ரிக் ஷா, ஒரு லோடு ஆட்டோ ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.