கோவில்பட்டி அருகே அரசு பேருந்து-கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் காயம்
கோவில்பட்டி, செப்.18: தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நடுவபட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலைகுலைந்து ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் கண்டெய்னர் லாரி டிரைவர் மலையடிப்பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் காயமடைந்தார். அரசு பேருந்து பின்பகுதியும் சேதமடைந்து. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த கண்டெய்னர் லாரி டிரைவர் சுந்தரலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.