கஞ்சா விற்றவர் கைது
ஸ்பிக்நகர், செப்.18: முள்ளக்காட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ,வரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், தனிப்பிரிவு காவலர் ஜாண்சன், தலைமை காவலர்கள் முத்துமணி, திரவிய ரத்தினராஜ், சமியுல்லா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முள்ளக்காடு சாமி நகர் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முள்ளக்காடு சாமி நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் சின்னராசு (30) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர்.