சேதமடைந்து கிடக்கும் ஆழ்வார்திருநகரி வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?
நாசரேத். அக். 16: ஆழ்வார்திருநகரியில் சேதமடைந்து கிடக்கும் வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழ்வார்திருநகரி மறவர் தெருவில் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே ஆலயம் மற்றும் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. இதன் வழியாக தினமும் பஸ்கள் தவிர மற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியாகத் தான் செல்கின்றனர். மேலும் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும் இந்த தெரு வழியாகத் தான் செல்கின்றனர்.
இந்நிலையில் வாய்க்கால் பாலம் தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பாலத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தால் எந்த நேரத்திலும் பெரிய ஆபத்து வர வாய்ப்பு உள்ளது. பாலத்தை சீரமைத்து விரிவுப்படுத்தினால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்து கிடக்கும் வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.