புதூர் யூனியனில் 5 கிராமங்களில் பேவர் பிளாக் சாலைப்பணிகள்
விளாத்திகுளம், நவ. 13: புதூர் யூனியனில் 5 கிராமங்களில் பேவர் பிளாக் சாலை பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மார்க்கண்டேயன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்து மக்களின் அடிப்படை தேவைகளான சாலை அமைத்தல், குடிநீர், சுகாதார வளாகம், கலையரங்கம், சமுதாய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் புதூர் யூனியனுக்குட்பட்ட சின்னூர் கிராமத்தில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலும், மாவிலோடை கிராமத்தில் ரூ.16.58 லட்சம் மதிப்பிலும், என்.ஜெகவீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.குமாரபுரத்தில் ரூ.9.35 லட்சம் மதிப்பிலும், டி.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் ரூ.10.42 லட்சம் மதிப்பிலும், பூதலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.சின்னையாபுரம் கிராமத்தில் ரூ.19.04 லட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதூர் பிடிஓக்கள் தினகரன், ராஜாராம், துணை பிடிஓ ஜெயமித்ரா, திமுக புதூர் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு செல்வராஜ், மத்திய ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.