குரும்பூர் அருகே பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா?
உடன்குடி, நவ. 13: குரும்பூர் அருகே பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடி ஊரக கால்நடை மருந்தகம் செல்லும் வழித்தடமான சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி சாலை காயாமொழி, பூச்சிக்காடு செல்லும் சாலையை இணைக்கிறது. இந்த சாலை அமைத்து பல ஆண்டுகளான நிலையில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் தற்போது தார் சாலை கற்சாலையாக காட்சியளிக்கிறது. தார்கள் பெரும்பாலான பகுதிகளில் உடைந்து கற்கள் பெயர்ந்து சரள் சாலையாக மாறி விட்டது. சில பகுதிகளில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்பு போன்று அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.