விபத்துகளை தவிர்க்கும் வகையில் மூக்குப்பீறியில் வேகத்தடைகளுக்கு எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா?
நாசரேத், செப்.13: விபத்துகளை தவிர்க்கும் வகையில் மூக்குப்பீறி பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு எச்சரிக்கை வர்ணம் பூச வேண்டுமென மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி முன்பு மெயின் ரோட்டில் இரு பக்கமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வெள்ளை வர்ணமும் தற்போது அழிந்துள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமலே வேகத்தடையை கடக்கின்றன. இதனால் சிறு சிறு விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. இவ்வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்களும் இந்த வழியாகத் தான் செல்கின்றனர். எனவே விபத்துகளை தடுக்கும் விதமாக வேகத்தடையின் அளவை அதிகரிப்பதுடன் எச்சரிக்கை வர்ணமும் பூச வேண்டும் என மாணவ- மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், கிராம நலக்கமிட்டி செயலாளருமான செல்வின் கூறுகையில், இந்த ரோட்டில் பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை தாழ்வாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்காமல் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் சிறு சிறு விபத்துகள் நடப்பதோடு பொதுமக்கள் கீழே விழுந்து காயமடையும் நிலையும் ஏற்படுகிறது. வேகத்தடையை முறையாக அமைக்க வேண்டும். பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை வழியாக தினமும் அதிகமான மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர். எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி விபத்தை தவிர்க்கும்விதமாக வேகத்தடைகளை முறையாக அமைத்து, வெள்ளை வர்ணம் பூச வேண்டும், என்றார்.