சந்தனமாரியம்மன் கோயில் ஆடி கொடை விழா துவக்கம்
திருச்செந்தூர், ஆக. 12: திருச்செந்தூர் கரம்பவிளையில் அமைந்துள்ள சந்தனமாரி அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா கடந்த 10ம் தேதி மாலை 6 மணிக்கு கண் திறப்பு பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு பஜனை நடந்தது. நேற்று (11ம் தேதி) காலை, மதியம் சந்தனமாரியம்மன் வார சந்தா குழு, மாத சந்தா குழுக்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. இந்நிலையில் இன்று (12ம் தேதி) மதியம், இரவு சிறப்பு அன்னதானம், நேர்த்திக்கடன் செலுத்துதல், முளைப்பாரி ஊர்வலம், அலங்கார கொடை விழா தீபாராதனை நடைபெறும். நாளை (13ம் தேதி) அதிகாலை படப்பு தீபாராதனை, வரி சாப்பாடு வழங்கல், மதியம் மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெறும். மாலை மேளத்தாளங்கள் முழங்க திருமுருகன் சன்னிதான கடலில் முளைப்பாரி பிரியிடுதல் நடக்கிறது.
14ம் தேதி காலை வரி பிரசாதம் வழங்கல், இரவு இசை கச்சேரி நடைபெறும். 15ம் தேதி இரவு கேரள நடன கலைஞர்களின் கலை நிகழ்வு, 16ம் தேதி இரவு கரம்பை சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்வு நடக்கிறது. 17ம் தேதி இரவு திரையிடலும், 18ம் தேதி கடந்த ஆண்டு நடந்த கொடை விழாவின் நிகழ்ச்சி தொகுப்பு வெளியிடலும் நடைபெறும். வரும் 19ம் தேதி இரவு 8ம் நாளையொட்டி பொங்கல் பூஜையும், அதைத்தொடர்ந்து கொடை விழா நிகழ்ச்சி தொகுப்பு திரையிடலும் நடைபெறும். கொடை விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் காசி ஊர் பொருளாளர் முருகேசன் ஊர் செயலாளர் சங்கர் ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் உதயா மற்றும் ஊர் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.