கோவில்பட்டி அருகே இடைசெவலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
கோவில்பட்டி, அக். 10: கோவில்பட்டி அருகே இடைசெவலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தலைமை வகித்த கோவில்பட்டி பிடிஓ ஸ்டீபன் ரத்தினகுமார், தாசில்தார் பாலசுப்பிரமணியன், முகாமை துவக்கிவைத்தனர். இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற வில்லிசேரி, இடைசெவல், சத்திரப்பட்டி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனை பட்டா, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இவற்றை சம்பந்தப்பட்ட துறைரீதியான அலுவலர்களிடம் வழங்கிய அதிகாரிகள், விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். இதில் உடனடியாகத் தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு பல்வேறு ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில் மண்டல துணை தாசில்தார் பாலு, சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் செல்வகுமார், ஆர்ஐ மாலதி, விஏஓ அபிராமி சுந்தரி, திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயக்கண்ணன், நாலாட்டின்புதூர் மாஜி பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார் மற்றும் வில்லிசேரி, இடைசெவல், சத்திரப்பட்டி பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.