நெடுங்குளத்தில் இருக்கைகள் இல்லாத நிழற்குடையால் பயணிகள் சிரமம்
சாத்தான்குளம், செப்.9: நெடுங்குளத்தில் பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாத்தான்குளம் ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி நெடுங்குளத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அப்போதைய எம்பி நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடையில் இரும்பினாலா இருக்கைகள் கொண்டு புதிய வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் இருக்கைகள் உடைந்து காணப்பட்டது. தொடர்ந்து அந்த இருக்கைகள் பராமரிக்கப்படாமல் இருந்ததால் தனித்தனியாக பெயர்ந்ததால் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெடுங்குளம் பயணியர் நிழற்குடையில் எட்டு இருக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு இருக்கை மட்டும் உள்ளது. மற்ற இருக்கைகள் இருக்க வேண்டிய இடத்தில் கம்பி மட்டும் உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் இந்த பயணியர் நிழற்குடையில் அமர முடியாமல், அதன் அருகில் நின்று பேருந்தில் பயணித்து வருகின்றனர். நெடுங்குளம் பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல் இருப்பதால் கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். அதனால் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இதனை கவனித்து, நெடுங்குளத்தில் இருக்கைகள் இல்லாமல் இருக்கும் பயணியர் நிழற்குடையை சீரமைத்து இருக்கைகள் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.