விளாத்திகுளம் அருகே வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
விளாத்திகுளம், டிச. 7: விளாத்திகுளம் அருகே தொழிலாளி வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த தம்பதியினர் சின்னமுனியசாமி- காளியம்மாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்திருநாளின் 3வது நாளான நேற்று முன்தினம் இரவு, காளியம்மாள் தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றும்போது குளிர்சாதனப்பெட்டி மீதும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார்.
பின்னர் வீட்டின் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச்சென்றுள்ளார். அப்போது குளிர்சாதன பெட்டியில் எரிந்த மெழுகுவர்த்தி சாய்ந்து தீப்பிடித்து, குளிர்சாதன பெட்டி முழுவதுமாக தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்ததுள்ளது. தொடர்ந்து மற்ற மின்சாதன பொருட்களுக்கும் தீ பரவி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த காளியம்மாள், வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மேசை, மிக்சி, பீரோ, கிரைண்டர் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து சேதமானது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.