திருச்செந்தூரில் முழுமையாக சேதமடைந்த சாலை
திருச்செந்தூர், டிச. 7: திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலரதவீதி சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்றதாகி உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நகராட்சிக்குட்பட்ட 4 ரதவீதிகள் வழியாக பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். மேலும் உள்தெருக்களில் உள்ளவர்கள் ரதவீதிகளை கடந்தே நகருக்கு வெளியே செல்கின்றனர். இதனால் ரதவீதிகளில் எப்போதுமே வாகன நெருக்கடி மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளது. இதில் வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி ஆகியன நகராட்சி சாலை என்பதால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை திடமாக உள்ளது. ஆனால் மேலரதவீதி சாலையானது, தூத்துக்குடி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் ரோடு தற்போது முழு அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆங்காங்கே பள்ளம், மேடுகளாகவும், குண்டும், குழியுமாகவும் மாறிவிட்டது.
மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள், பாதசாரிகளையும் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளையும் தடுக்கி விழச் செய்கிறது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வழக்கமாக தெப்பக்குளத்தில் நீராடி, இங்குள்ள அரசாழ்வார் விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடனாக காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் பழுதான மேலரதவீதி மற்றும் தெப்பக்குளம் சாலையில் அதிக சிரமமடைகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் முழு அளவில் சேதமடைந்த மேலரதவீதி மற்றும் தெப்பக்குளம் தெரு சாலையை புதிதாக அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.