தூத்துக்குடியில் 15, 16ம் தேதிகளில் வாலிபால் பிரிமியர் லீக் போட்டிகள்
தூத்துக்குடி, நவ. 6: தூத்துக்குடியில் வரும் 15, 16ம் தேதிகளில் வாலிபால் பிரிமியர் லீக் போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி ரஜினி கிளப் ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாலிபால் பிரிமியர் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். தூத்துக்குடியில் நடைபெறும் வாலிபால் பிரிமியர் போட்டியில் பங்குபெற விரும்புவோர் வரும் 14ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவழுதிநாடார்விளையில் நற்செய்தி கூட்டம் ஏரல், நவ. 6:ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம், திருப்பலி, நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏரல் சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ரவீந்திரன் பர்னாந்து தலைமை வகித்து நடத்தினார். தொடர்ந்து ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கு அசன விருந்து நடந்தது. ஏரல், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, சேதுக்குவாய்த்தான், அதிசயபுரம், கொற்கை, புன்னக்காயல், முக்காணி, தூத்துக்குடி, அரசன்குளம் மற்றும் பங்கு இறைமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.