தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் 6 பேரை காவலில் எடுத்து விசாரணை
சேலம், ஆக. 5: தூத்துக்குடி அந்தோணிபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். பிரபல ரவுடியான இவர் சேலத்தில் கடந்த 15ம் தேதி மனைவியுடன் ஓட்டலில் சாப்பிட சென்றபோது எதிர்கோஷ்டியை சேர்ந்த பிஸ்டல் (எ) ஹரிபிரசாத் தலைமை யில் அங்கு வந்த கும்பலை சேர்ந்தவர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 3 பைக்கில் கொலையாளிகள் சேலத்திற்கு வந்துள்ளனர். அந்த பைக்குகளை பறிமுதல் செய்வதற்காக இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான தனிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர். கொலை சம்பவம் நடந்தபோது முதலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து ரவுடி பிஸ்டல் ஹரிபிரசாத், அந்தோணி(எ) வல்லரசு, ஜெயசூரியா, சந்தோஷ், ஆனந்தகுமார் மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் காந்திமதி மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இவர்களிடம் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.