திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி
திருச்செந்தூர், ஜன. 4: திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருநெல்வேலி, பாலக்காடு மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் ₹8.16 கோடி செலவில் வளர்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலாவது நடைமேடையில் இருந்து 2வது நடைமேடைக்கு செல்வதற்கு மின் தூக்கி (லிப்ட்) வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பயன்பாட்டிற்காக இந்த மின் தூக்கி தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் இருப்புபாதையாக உள்ள நமது நாட்டில் வடக்கே காஷ்மீரில் தொடங்கி தெற்கே கடற்கரை நகரங்களான ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலேயே ரயில் பாதைகள் முடிவடைகிறது. இந்த 4 நகரங்களும் முக்கிய சுற்றுலா மற்றும் தொழில் நகரங்களாக விளங்குகின்றன. எனவே மற்ற 3 ரயில் நிலையங்களில் உள்ளதுபோல கோயில் நகரான திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பயணிகள் மற்றும் பக்தர்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.