மன்னார்குடியில் பூட்டி கிடந்த வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி
மன்னார்குடி, அக். 31: மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு ஞானம் நகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (75). பள்ளிக்கல்வி துறையில் பணியா ற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் கலைமணி கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருவதால் மதுக்கூர் சாலை சாந்தி குருதேவ் நகரில் உள்ள அவரது வீடு கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கிறது. ரெங்கநாதன் அவ்வப் போது அந்த வீட்டிற்கு சென்று சுத்தம் செய்து வருவாராம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மகள் வீட்டை சுத்தம் செய்ய ரெங்கநாதன் வந்தார். அப்போது வீட் டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. திடுக்கிட்ட அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அதுகுறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், டவுன் எஸ்ஐ சங்கவை, தனிப்பிரிவு கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசரணை நடத்தினர். அதில், வீடு நீண்ட நாட்களாக பூட்டி இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் சிலர் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதும், வீட்டில் நகை மற்றும் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
