திருவாரூர் அருகே அரசுக்கு சொந்தமான குளத்தை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி
திருவாரூர், ஆக.27: திருவாரூர் அருகே அரசுக்கு சொந்தமான பொது குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக மக்கள் அதிகாரம் கழகத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்அருகே அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட ஆணை தென்பாதி கிராமத்தில் இருந்து வரும் அரசுக்கு சொந்தமான பொதுகுளம் ஒன்றினை அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் இந்த குளத்தினை மீன்பிடி பாசி குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறி பல வருடங்களாக அதில் மீன் பிடித்துக் கொண்டு அவருக்கு சொந்தமான குளம் போன்று பராமரித்து வருவதாகவும், மீன்பிடி பாசி குத்தகை என்பது 2020 ம் ஆண்டுடன் முடிவுற்றுள்ள நிலையில் அதன் பின்னரும் 5 ஆண்டு காலமாக அதே பெயரை கூறிக்கொண்டு குளத்தை ஆக்கிரமித்து வருவதால் அவரிடம் இருந்து இந்த குளத்தினை மீட்டு தர வேண்டும் என நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகார கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆசாத், இணைச் செயலாளர் லெனின், பொருளாளர் முரளி மற்றும் கிராம மக்கள் சார்பில் மோகன் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து மனு அளித்துள்ளனர்.