திருத்துறைப்பூண்டியில் கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றி நகராட்சி அதிரடி
திருத்துறைப்பூண்டி, நவ. 25: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தண்ணீரை வௌியேற்றியது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள வானகார தெருவில் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நேற்று முன்தினம் இரவு மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி, கவுன்சிலர் தாஜீதீன், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி ஆகியோர் உடனடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் இருந்து மழை நீர் வடிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மழை நீர் வடிய வைக்க முடியாத பகுதிகளில் நகராட்சி லாரிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டது. பின்னர் குழாய்கள் மூலம் லாரிகள் உதவியுடன் தேங்கிய மழை நீர் உடனடியாக உறிஞ்சி எடுக்கப்பட்டது. மழை நீர் தேங்கிய இடங்களுக்கு உடனடியாக வந்து விரைந்து நடவடிக்கை எடுத்து, உடனடி தீர்வு கண்ட திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்திற்கு, அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.