சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் திருத்துறைப்பூண்டியில் மழையின் சதிராட்டத்தால் ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்களை மூழ்கடித்த மழைநீர்
திருத்துறைப்பூண்டி, நவ. 25: திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் மழையின் சதிராட்டத்தால் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதை கண்டு செய்வதறியாது விவசாயிகள் பரிதவித்து நிற்கின்றனர். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் விளைநிலங்களில் சாகுபடி செய்திருந்த தாளடி பயிர்களும் மூழ்கின.
குறிப்பாக திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான ஆலத்தம்பாடி, மணலி, எழிலூர், ஆதனூர், ஆண்டாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் 30 நாட்கள் ஆன தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் வடிகால் வாய்க்கால்களில் அடித்து வரப்பட்ட வெங்காய தாமரை செடிகள், இப்பகுதியில் மண்டியதன் காரணமாக, தண்ணீர் தேங்கி வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.