சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், நவ. 21: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிக்கோரி திருவாரூரில் நேற்று செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வழக்கினை கைவிட வேண்டும். பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கவேண்டும், தேர்தல் வாக்குறுதி எண் 356யை உடனடியாக நிறைவேற்றவேண்டும், எம்.ஆர்.பி. தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்,காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும்.
புதிய பணியிடங்களை உருவாக்கவேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும், 11 மாத கால ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட செயலாளர் அன்பரசி தலைமையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.