தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மன்னார்குடி, நவ. 19: தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய மருந்தியல் வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 64வது தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பாக மருந்துகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் நேற்று நடந்தது. கல்லூரி துணை முதல்வர் டாக்டர் லோகநாதன், பாலிடெக்னிக் முதல்வர் மதிவாணன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், டாக்டர் கலாம் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு மருந்து ஆளுநர்களின் முக்கியத்துவம், உயிர்காக்கும் மருந்துகளின் பயன்பாடு, மது, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியப்படி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.