திருவாரூர் மாவட்டத்தில் நாளை 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
திருவாரூர், ஆக.14: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 430 ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினமான நாளை (15ம் தேதி) கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது.
கிராம சபை கூட்ட நடவடிக்கைகள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளிலும் நாளை நடைபெறவுள்ள இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சிகள், அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளது.
எனவே கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொது மக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளர்.