காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்த போராட்டம்
பொன்னேரி: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் சுமார் 5,000 காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் எரிவாயு முனையத்தில் இருந்து எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து கடந்த வியாழக்கிழமை முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாய் முனையத்திலிருந்து நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் முடங்கியுள்ளன. எல்பிஜி முனையத்திலேயே 100க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருவதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.