நீடாமங்கலத்தில் குடும்ப தகராறு வெண்ணாற்றில் குதித்து பெண் தற்கொலை
நீடாமங்கலம், ஆக. 6: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி மருதாம்பாள்(59).இவர் நீடாமங்கலம் வெண்ணாற்றுப்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் பாலத்தின் மீது ஏறி, திடீர் என வெண்ணாற்றில் குதித்தார்.அப்போது ஆற்று நீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், ஆற்றில் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
ஆனால் அதற்குள் மூச்சு திணறி மருதாம்பாள் உயிரிழந்தார்.தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மருதாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.போலீசாரின் விசாரணையில் மருதாம்பாள் வீட்டில் கோபித்துக்கொண்டு நீடாமங்கலம் வந்து வெண்ணாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.