உலக சாரணர் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா
திருத்துறைப்பூண்டி, ஆக. 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மன்னார்குடி பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ராஜேஸ்வரி மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சாவித்திரி ஆகியோரது ஆலோசனையின் பேரில் உலக சாரணர் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு பள்ளி ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் சக்கரபாணி கூறுகையில், மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. நம்நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறது.
புவி வெப்பமயமாவதற்கு காரணமான காற்று மாசுபாடு ஒலி மாசுபாடு போன்றவற்றை குறைக்கும் நோக்கத்தோடு ஒரு பள்ளி ஒரு மரம் என்ற திட்டத்தினை இன்று துவக்கி இருக்கின்றோம் இதில் 73 பள்ளிகளில் மரக்கன்றுகளை தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பொறுப்பாளர்கள் சாரண சாரணியர்கள் நட்டு உள்ளார்கள் மாவட்டத்தில் மீதம் இருக்கக்கூடிய 627 பள்ளிகளிலும் ஒரு வார காலத்திற்குள்ளாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இருக்கிறார்கள் என்றார்.