பழைய நீடாமங்கலம் வாய்க்கால் தூர் வாரும் பணி
நீடாமங்கலம்,நவ.1: நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நகர் புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பழைய நீடாமங்கலம் வாய்க்கால் தூர் வாரும் பணி. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் உள்ள பழைய நீடாமங்கலம் பாசன வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாராமல் இருந்தது. இந்த வாய்க்காலில் மரச் செடிகள், கொடிகள் ஏராளமாக படர்ந்து பாசனம் நீர் செல்வதற்கான வசதி இல்லாத நிலை இருந்தது.
இந்த வாய்க்காலில் மழைக்காலங்களில் வடிகால் செல்லாமலும்,தண்ணீ தேங்கி வீடுகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்பட்டது. இதனையறிந்த விவசாயிகள், பொதுமக்கள் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் கலியபெருமாள், துணைத் தலைவர் ஆனந்தமேரி ராபர்ட் பிரைஸ் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிர்வாகம் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் மக்களை வைத்து தூர் வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.