நீடாமங்கலம் அருகே பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
நீடாமங்கலம், நவ. 26: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ரிசியூர் ஊராட்சியில் உள்ளது வரதராஜ பெருமாள் கட்டளை, கட்டையடி. இந்த 2 ஊர்களுக்கு இடையில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இந்த சாலை வழியாக வரதராஜ பெருமாள் கட்டளை-காரிச்சிங்குடி இடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக காரிச்சாங்குடி, மடப்புரம், சமுதாயக்கரை, மேலாளவந்தச்சேரி, கீழாளவந்துச்சேரி, தேவங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இந்த பாலத்தின் வழியாக நீடாமங்கலம் வந்து செல்கின்றனர். அதேபோன்று நீடாமங்கலத்தில் இருந்து மேலாளவந்தச்சேரி, காரிச்சாங்குடி, மடப்புரம், தேவங்குடி, புது தேவங்குடி, அரிச்சபுரம், பொதக்குடி, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் மக்கள் சென்று வருகின்றனர். எனவே வரதராஜ பெருமாள் கட்டளையில் இருந்து கட்டையடி வரையில் உள்ள இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.