ஆண்களுக்கான நவீன குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
திருவாரூர், நவ. 26: திருவாரூர் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து கலெக்டர் மோகனச்சந்திரன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பிலாத குடும்ப நல சிகிச்சை முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4ந் தேதி வரையில் நடைபெறவுள்ளதையொட்டி இம்முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனமானது இன்றைய தினம் (நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்துகொண்டு தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை (ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை) பெற்று கொள்பவருக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.அயிரத்து 100-மும், ஊக்கவிப்பாளர்களுக்க ரூ.200ம்- அரசு சார்பில் வழங்கப்படுகிறது. குடும்ப நல சிகிச்சையானது மிக மிக எளியது. பாதுகாப்பானது.
இந்நவீன குடும்ப நல சிகிச்சையானது (நவீன கருத்தடை சிகிச்சை முகாம்) நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்படுவதால் இதனை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளர். மேலும் முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோக், துணை இயக்குநர் (மாவட்ட குடும்ப நலச்செயலகம்) செல்வி, தேசிய நலக்குழுமம் ஒருங்கிணைப்பாளர் தேவிகா, மக்கள் கல்வி தகவல் அலுவலர் பன்னீர்செல்வம், புள்ளியியல் உதவியாளர் நதியா, வட்டார சுகாதார புள்ளியிலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.