எடையூர் அரசு பள்ளியில் நூலகத்தின் பயன்குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
முத்துப்பேட்டை,அக்.26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகத்துக்கு வாங்க என்ற தலைப்பில் நூலகத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் இந்திரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆசிரியர்கள் ரமேஷ் குமார், கணேஷ்குமார், ஆரோக்கியராஜ், சுருளி ஆண்டவர், சரவணன், கயல்விழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், எடையூர் நூலகருமான ஆசைத்தம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அவர் பேசும்போது, தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு என பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்கள் நூல்களை கொண்ட நூலகங்களை அமைத்து புத்தக வாசிப்பினை வளர்க்கும் விதமாக இலக்கிய திருவிழாக்கள் புத்தகத் திருவிழாக்கள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால் மற்றவர்கள் உதவியின்றி தன் வாழ்வில் ஜெயிக்க முடியும்.
அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றாலும் மருத்துவர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் நூலகத்தினை பயன்படுத்த வேண்டும் என்று தற்கால தலைமுறைகள் உணர்ந்து வருகின்றனர். தங்களது வாழ்வில் இருந்து ஏழ்மை ஒழிய நிரந்தர வேலை அவசியம் என்பதை உணர்ந்து பள்ளி பயிலும் மாணவர்கள் பள்ளி பாட புத்தகங்களுடன் நூல் நிலையங்களில் உள்ள நூல்களை வாசித்து வர வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு தகவல்களை பெற்று வரும் இந்த காலத்தில் சிந்தனை குறைந்து வருவது அபாயகரமானது என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்து சிந்தனையை வளர்த்துக் கொள்ளும் விதமாக புத்தகங்களை வாசிக்க வேண்டும்” என்றார்.இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முடிவில் தன்னார்வமாக 20 மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினராக இணைந்தனர்.