மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
திருவாருர், அக். 25: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்து அரசு மூலம் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே திருக்காரவாசல் மற்றும் நார்த்தங்குடி, கொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயிர்கள் சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட பயிர்கள் விபரம் குறித்து அரசு மூலம் கணக்கெடுப்பு நடத்துவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், பின்னர் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, கலெக்டர் மோகனசந்திரன், வேளாண் துறை செயலாளர் தெட்சிணாமூர்த்தி, இயக்குனர் முருகேஷ், எம்.பி செல்வராஜ், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், தாட்கோ தலைவர் இளையராஜா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் பாலசரஸ்வதி, துணை இயக்குனர்கள் ஹேமாஹெப்சிபாநிர்மலா, விஜயலெட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.