அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் சரிபார்க்கும் பணி
திருவாரூர், டிச. 12: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி திருவாரூரில் வாக்குபதிவு பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தினை அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மோகனச்சந்திரன் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 எம்.எல்.ஏ தொகுதிகள் உள்ளன. இவற்றில் தற்போது 5 லட்சத்து 22 ஆயிரத்து 982 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 52 ஆயிரத்து 526 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 75 ஆயிரத்து 577 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் என்பது 1.1.2002ஐ தகுதி நாளாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 1.4.2002 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 46 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 843 பெண் வாக்காளர்கள் என்று கூடுதலாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 889 வாக்காளர்கள் இருந்தனர்.
இவ்விபரங்கள் தற்போதைய வாக்காளர் விபரங்களுடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் ஒப்பிடப்பட்டு இவ்விபரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடைசியாக 2002ம் ஆண்டு நடைப்பெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர்களாக இருந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 889 வாக்காளர்களில் தற்போதும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 355 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் 4 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் இருந்து வரும் ஆயிரத்து 194 வாக்குச்சாவடி நிலையங்களிலும் வசித்து வரும் 10 லட்சத்து 75 ஆயிரத்து 577 வாக்காளர்களுக்கும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு தற்போது நிரப்பப்பட்ட படிவங்களை திரும்ப பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் மின்னணு வாக்குபதிவு பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்வதற்குரிய இயந்திரமான விவிபேட் இயந்திரம் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் முதல்நிலையாக சரிபார்க்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 4 எம்.எல்.ஏ தொகுதிகளுக்குமான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வரும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஸ்குமார், ஆர்.டி.ஒக்கள் சத்யா (திருவாரூர்), யோகேஸ்வரன் (மன்னார்குடி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.