இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில் திருப்பணி
வலங்கைமான், ஆக.12: வலங்கைமான் அருகே ஆண்டாங்கோயில் சிவசேகரி அம்பிகா உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் கோயில் பழமை மாறாமல் இந்து சமய அறநிலையத்துறை ஆணைய பொது நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நகர் பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயில், ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் சந்திரசேகரபுரம் விஸ்வநாத சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உபயநிதியாக திருப்பணி வேலைகள் முடிவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மேலும் 1000 ஆண்டு பழமையான திருக்கோயில்கள் அடையாளங் காணப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் நிலையில்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டாங்கோயில் கிராமத்தில் சிவசேகரி அம்பிகா உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ருது பரிகார ஸ்தலம் என அழைக்கப்படும் இக்கோயில் அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்ற ஸ்தலமாகும். இந்த சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி இந்து சமய அறநிலைத்துறை ஆணைய பொது நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. ராஜகோபுரம் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் பூசும் பனி சுற்று சுவர் சீர்மைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.