திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு பிரதமர் நிதி உதவி
திருவாரூர், டிச. 11: திருவாரூர் மாவட்டத்தில் பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் உதவிதொகை பெற்றிட பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் இணையதளம் மூலம் வரும் 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி 2024-25ம் ஆண்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ, மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள யூ.எம்.ஐ.எஸ் எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, மேற்கண்ட இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 31ந் தேதி ஆகும்.
கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.