நீடாமங்கலம் அருகே இருளில் மூழ்கி கிடக்கும் வையகளத்தூர் மேம்பாலம்: சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
நீடாமங்கலம், செப்.2: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் மேம்பாலம் வழியாக தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பஸ் மற்றும் வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்கின்றனர். அதேபோன்று நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் போடும்பொழுது சென்னை, கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி,பட்டுக்கோட்டை,திருத்துறைபூண்டி மார்க்கத்தில் வரக்கூடிய வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக தான் நீடாமங்கலம் வந்து செல்கிறது.
அப்பொழுது செல்லும்பொழுது இரவு நேரங்களில் மேம்பாலத்தில் லைட்டுகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது.இந்த பாலத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வாகனங்களை கல்விட்டு தாக்குவதாகவும், இருசக்கர வாகனங்களை வழி மறிப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அச்சத்தில் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் லைட்டுகளை எரிய விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.