மழையின்றி நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்
புழல், அக்.30: மழையின்றி நீர்வரத்து குறைந்ததால், புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் மீண்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. 1000 கன அடியாக உயர்த்தப்பட்டு, பின்னர் 500 கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டது. தற்போது, மழை ஓய்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால், புழல் ஏரிக்கு 535 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, நீர்வரத்து குறைந்து வருவதால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,736 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.63 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 24 மணி நேரமும் ஏரிக்கான நீர்வரத்து குறித்து கண்காணித்து வருவதாகவும், மீண்டும் மழை தொடங்கி நீர்வரத்து அதிகரித்தால் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.